26/09/2026
சுரண்டை காவல் சரகம், மரியாதாயபுரத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து என்பவரது வீட்டில் கடந்த 22.08.2026 அன்று, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்றது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சுரண்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அசோக்குமார் அவர்களின் நேரடி கண்காணிப்பிலும், ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கிளாட்சன் ஜோஸ் அவர்களின் மேற்பார்வையிலும், சுரண்டை காவல் ஆய்வாளர் திரு. மதன் ராம்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பவம் தொடர்பாக 110 இடங்களில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டவர்கள் மனோஜ் (39), த/பெ. தமிழ்செல்வன், தென்னம்பிள்ளை தெரு, வி.கே.புதூர் மற்றும் ராஜசேகர் (33), த/பெ. குமார், பகவதி அம்மன் கோவில் தெரு, பெரிய கடை வீதி, திண்டுக்கல் ஆகியோர் என தெரியவந்தது.
இதில், மனோஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவி உச்சினிமாகாளி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ. 3.90 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜசேகர் (33) என்பவரை தனிப்படையினர் இன்று கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 25 பவுன் எடையுள்ள தங்க கட்டிகள் மற்றும் நான்கு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், ராஜசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, திருடப்பட்ட சொத்துக்களை மீட்ட தனிப்படையினரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.