12/11/2018
சூரசம்ஹாரம்
சமீப காலமாக தமிழ்நாட்டில் சிலருக்கு சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களில் எல்லாம் அநியாயத்துக்கு தமிழ் உணர்வு பீறிட்டுக்கொண்டு வருகிறது. நல்ல விஷயமாக இருந்தால் நாமும் சேர்ந்து சந்தோஷப்படலாம். ஆனால் வருவதெல்லாம் உருப்படாத விஷயமாக இருக்கிறது.
தீபாவளி நேரத்தில் நரகாசுரன் என்பவன் தமிழ் மன்னன் அவனை கொன்ற கிருஷ்ணன் கொடுங்கோலன் எனவே தீபாவளியை புறக்கணிக்கவேண்டும் என்று ஒரு கோஷ்டி கிளம்பியது. இதில் நரகாசுரனுக்கே தெரியாத விஷயம் கூட நடந்தது. அவனுக்கு ஏதோ தாழ்த்தப்பட்ட ஜாதியில் அட்மிஷனே கிடைத்துவிட்டது. தாசில்தார் கையெழுத்துடன் சான்றிதழ் இருந்தால் கூட ஆச்சர்யமில்லை.
இது இப்போது தான் என்றில்லை. ராவணன் என்னும் தமிழனை ராமன் என்னும் ஆரியன் கொன்றான் என்று காலம் காலமாக ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு அலைகிறது. ராட்ஷசனாக இருந்தாலும் குலத்தில் அவனும் ஒரு பிராம்மணன் என்று இந்த முட்டாள்களுக்கு புரிவதில்லை.
தப்பு செய்பவனெல்லாம் தமிழன் என்று ஒரு உயர்ந்த கொள்கை வைத்திருக்கிறார்கள். கருப்பாக இருப்பவன், அரக்கன், அசுரன் போன்றவர் எல்லாம் தமிழன்தான் என இவர்களே ஏகமனதாக தீர்மானித்து இவர்களை வெற்றிக்கொண்டோர் எல்லாம் ஆரியர் அவர்களை ஒழிக்கவேண்டும் என்று கூப்பாடு போடுகிறார்கள்.
இப்படி ஏடாகூடமாக எல்லாவற்றிலும் தமிழையும் தமிழனையும் சம்பந்தப்படுத்துபவர்களுக்கு சோதனையாக வந்தவன் தான் தாரகாசுரனையும், சிங்கமுகாசுரனையும் சூரபத்மனையும் அழித்த முருகப்பெருமான்.
குறிஞ்சி கடவுள், முப்பாட்டன் என்று சொல்லிக்கொண்டு காவடி தூக்க ஆரம்பித்து விட்ட கூட்டம் ராமனையும் கிருஷ்ணனையும் ஏதோ வடநாட்டு கடவுள் என்று சொல்வது போல முருகப்பெருமானை சொல்லிவிட முடியுமா? அவனே தமிழ் கடவுள் அல்லவா? ஆப்பசைத்த குரங்குகளாக மாட்டிக்கொண்டனர். இப்போது இந்த ராட்சஷர்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வருவார்களா?
இன்னொன்று. உயர் சாதி சாமிகள் மட்டும் தான் கோவிலுக்குள் இருக்கும் வீரன், இருளன், முனி போன்ற நாட்டார் தெய்வங்கள் கோவிலுக்கு வெளியே தான் இருக்கும். சாமிகளுக்கு உள்ளேயே சாதி இருக்கிறது என்றும் சிலர் கொளுத்தி போடுகிறார்கள்.
இப்படி பேதம் ஏற்படுத்துவது யார் என்று பார்த்தால் கடவுள் நம்பிக்கை இல்லாத, வெளிதேச மதங்கள் வீசும் எலும்பு துண்டுகளுக்கு வாலாட்டும் சில விஷ ஜந்துக்கள் மட்டுமே. இருந்தாலும் இவர்கள் சொல்வதும் சரிதானோ, பிராமணர்கள் ஏதேனும் சூழ்ச்சி செய்து நாட்டார் தெய்வங்களை காவலுக்கு வைத்துவிட்டனரோ என சந்தேகம் கொண்டோருக்கு இந்த விளக்கம்.
இவர்கள் சொல்வது அத்தனையும் பொய், புரட்டு என்பது இவர்கள் மூச்சுக்கு முந்நூறு தரம் முழங்கும் தமிழிலேயே இருக்கிறது. சங்க இலக்கியத்தில் முதன்மையானதும் சைவ திருமுறைகளில் 11 ம் திருமுறை நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை ஒன்றே போதும் இவர்களை கிழித்து எறிய. இது கிமு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றால் இதன் தொன்மையை பார்த்துக்கொள்ளுங்கள். ஏசு பிறப்பதற்கு குறைந்தது 200 வருடம் முன்பு எழுதப்பட்டது.
இதை எழுதியவர் நக்கீரர். திருவிளையாடல் படம் பார்த்த எல்லாரும் அறிந்த கதை தான். சிவபெருமான் பாடலின் நக்கீரர் குற்றம் கண்டுபிடித்து அதனால் எரிக்கப்பட்ட கதை. சினிமாவுக்காக கதை பெருமளவு மாறிவிட்டது வேறுகதை.
நக்கீரருக்கு சாபம் ஏற்பட்டு கைலாசம் போனால் தான் விமோசனம் என்ற நிலை ஏற்பட்டது. அப்படி கிளம்பி வருகையில் திருப்பரங்குன்றத்தில் ஒரு பூதம் இவரை பிடித்து சிறைவைக்கிறது. அதிலிருந்து தப்பிக்க முருகப்பெருமானை வேண்டி அவர் பாடிய நூல் தான் திருமுருகாற்றுப்படை.
அப்பூதத்தை அழித்த முருகப்பெருமானிடம் தண்டனை குறைக்க வேண்டினார் நக்கீரர். அப்பாவின் சாபத்தை மாற்ற விரும்பாத முருகர் அவர் கயிலை வரை செல்லவேண்டாம் பாதி வழி வரை போனால் போதும் என்று தண்டனையை குறைத்து அருள்செய்தார்.
இந்த திருமுருகாற்றுப்படையில் சில துளிகளை பார்ப்போம். திருச்செந்தூரை பற்றி சொல்லிக்கொண்டு வரும் போது ஆறு முகங்களுக்கு விளக்கம் சொல்கிறார். அதில் இரண்டு..
ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே
ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே
அந்தணர்கள் தம் மரபு வழியில் மந்திரங்களை ஒலித்து இயற்றுகின்ற வேள்விகளை [யாகங்களை] ஏற்று மகிழ்வது ஒரு திருமுகம்;
தீய சக்திகளாகிய அசுரர்களைப் போரில் கொன்று அழித்து களவேள்வியை இயற்றச் செய்வது மற்றொரு திருமுகம்;
அந்தணரை காப்பதும் தீயோரை அழிப்பதும் முருகப்பெருமானே என்று நக்கீரர் விவரிக்கிறார்.
திருவேரகம் என்னும் சுவாமிமலை நான்காம் படைவீடு. இருப்பதிலேயே குறைவான பாடல் வரிகள் பெற்ற படைவீடு இதுதான். இதில் கிட்டதட்ட முழு வர்ணிப்பும் அந்தணாளரை பற்றியே இருக்கிறது.
குன்றுதோறாடல் என்னும் ஐந்தாம் படைவீடு எல்லா மலைகளையும் மொத்தமாக குறிப்பிடப்படுமிடம். இதில் வெறியாட்டு என்று ஒரு சடங்கு குறிப்பிடப்படுகிறது. அது ஆட்டை பலி கொடுத்து ஆடும் ஆட்டம். இங்கே பூசாரி யார் என்று பார்த்தால் வேலை வைத்துக்கொண்டு வெறியாட்டம் ஆடுபவன், வேலன். அவன் மீது முருகனே இறங்கி அருள் செய்வதால் வேலன் எனும் பெயரே பிற்காலத்தில் முருகனை குறிப்பதாக ஆயிற்று.
வேலனை மட்டுமல்ல தேவராட்டி என்னும் குறமகள் பற்றியும் கடைசி படைவீடான பழமுதிர் சோலையை சொல்லும்போது நக்கீரர் விளக்குகிறார். அவள் ஆட்டு கிடாயின் ரத்தம் கலந்த அரிசியை சிறுதெய்வங்களுக்கு பலியாக தூவிக்கொண்டே வருகிறாள் என்று வர்ணிக்கிறார்.
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ
அந்தணர் என்று இன்றைய முன்னேறிய வகுப்பினர் ( FC ) வழிபட்டதும் இந்த முருகனைத்தான். சீர் மரபினர் எனப்படும் ST வகுப்பினர் வழிபட்டதும் இதே முருகனைத்தான். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவன் எல்லாருக்கும் பொதுவானவன். அவன் சந்நிதானத்திலேயே சிறுதெய்வங்களுக்கும் பலியிடல் நடைபெற்றது என்பதும் சங்ககால நூலிலேயே இருக்கிறது.
இன்ன வழியில் இறைநிலையை இறவாநிலையை அடையவேண்டும் என இந்து மதம் இன்றும் என்றும் சொன்னதில்லை. அவரவர் வாழ்க்கை முறைக்கு ஏற்ப இறைவழிபாட்டை செய்யலாம் என்பதால் தான் வேதியர் வேள்வி வளர்த்து வழிபடுவதும் வேடுவர் வேட்டை பலி கொடுத்து வணங்குவதும். ஒன்று உயர்வு மற்றொன்று தாழ்வு என எங்கும் சொல்லப்படவில்லை.
ஆனால் இந்த வழிபாடு வித்யாசங்கள் சிலரது கண்களை ஏனோ உறுத்துகிறது. நானும் உன்னை போல வேள்வி செய்வேன் என சிலரும் என்னை போல நீயும் ஊனை திண்ணு என்று சிலரும் விதண்டாவாதம் செய்கின்றனர். அதிலும் வெளிதேச மதங்களிடம் சில்லறைக்காசு பெறும் சில்லறை பேர்வழிகள் இந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிடப்போகிறதே என்று பிரித்து வைக்க படாத பாடு படுகிறார்கள்.
சூரபதுமனும் தாரகாசுரனும் ஒரிஜினல் அசுரர்கள். யானைத்தலை, சிங்கத்தலை, மாமரம் என்று அடையாளம் கண்டுகொள்ள கூடிய வகையில் வருவார்கள். இன்றும் அவர்கள் இருக்கிறார்கள் நம்மால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி இருக்கிறார்கள்.
ஒரு சமயம் பகுதித்தறிவுவாதிகள் என்று ஒரு முகமூடியுடன் இருப்பார்கள். திடீரென சிறுபான்மை காவலர்கள் என்று இன்னொரு முகமூடி அணிவார்கள். இன்னொரு நேரம் தமிழின காவலர் முகமூடி இருக்கும். இப்போது காவடி தூக்கி முப்பாட்டன் என்று முனீஸ்வரன் போலிருக்கும் முருகன் படத்தை முகமூடியாக்கிக்கொண்டு கூட ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.
ஊன்றி கவனித்தால் ஒரே முகம்தான் தெரியும். இந்த தேசத்தின் வழிபாடுகளை, பழக்கவழக்கங்களை சிதைக்க வரும் வெளிநாட்டு சக்திகளின் முகம் தெரியும். அது தான் இப்படி பலப்பல வேஷங்களில் வருகிறது. பச்சோந்தி நிறம் மாறுவது போல கொடிமரம், சப்பரம், பூமி பூஜை என்று தன் அடையாளத்தை கூட மாற்றிக்கொண்டு வருகிறது. நாம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
பிரிந்து கிடந்த மாகாணங்களை ஒன்றாக்கி இந்திய தேசம் என்னும் ஒரே நிலமாக மாற்றிய இரும்பு மனிதருக்கு 182 அடியில் நர்மதை கரையில் சிலைவைத்திருக்கிறோம்.
அதை விட பன்மடங்கு மதரீதியில் பிரிந்திருந்த சமயங்களை சீர்படுத்தி செப்பனிட்டு அறுசமயமாக்கி நமக்கு தந்தவர் ஆதி சங்கரர். அவருக்கு தனியாக சிலை வைக்க முடியாது என்று தான் அவரே இமய மலையாக கயிலை மலையாக இருக்கிறார் போலும். ஆச்சர்யகரமாக அதே நர்மதை கரையில் தான் தன் குருநாதரை கண்டு அவர் உத்தரவுப்படி தன் ஜென்மப்பணியை தொடங்க கிளம்பினார்.
அந்த ஜகத்குருவே தன் குருவாக குமரனை வரிந்து சுப்ரமணிய புஜங்கத்தால் துதித்த இடத்தில் தான் இன்று சூரசம்ஹாரம் சிறப்பாக நடக்கிறது. அவர் வகுத்துக்கொடுத்த ஆறு சமயங்களின் வடிவாக ஆறுமுகங்களுடன் இருப்பவன்தான் நம் ஆறுமுகப்பெருமான்.
அவுணரை வதம் செய்த இந்த நன்னாளில் நம் ஒவ்வொருவர் உள்ளத்துள்ளும் இருக்கும் பொய், கயமை,ஏமாற்று, வஞ்சகம் போன்ற அவுணர்களை அழிக்க வேண்டுவோம்.
அதே போல நம் சமயத்தை தடம் தெரியாமல் அழிக்க கிளம்பியிருக்கும் முகம் காட்டாத எதிரிகள் எல்லாரையும் நம்மிடம் பிரிவினை ஏற்படுத்தவேண்டும் என்று நினைக்கும் பொய்யர்களையும் முருகனின் வேல்படையாக நின்று எதிர்க்க துணிவோம். உங்களோடு சேர்ந்து நானும் சேவலாக குரல் கொடுக்கிறேன். உரக்க கூவுவோம்..
வெற்றிவேல்!! வீரவேல்!!! வெற்றிவேல்!! வீரவேல்!!! வெற்றிவேல்!! வீரவேல்!!!