01/04/2020
ஊரடங்கை நிறுத்தினால் 6000 பேர் பாதிக்கப்படலாம்... ஊரடங்கை 49 நாட்கள் வரை நீட்டிப்பது சிறப்பாக இருக்கும்.
இந்தியாவில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்கள் கூறும் வழி என்ன?
பிரதமர் அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்குக்குப் பிறகு, கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்படுமா என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் உள்ள கணித அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆய்வு நடத்தினர்.
வயது அடிப்படையிலான மக்கள் தொகை, பொது இடங்களில் மக்களுக்கு இடையேயான தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதன் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.
அதாவது, ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத மத்தியில் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஊரடங்கை முடித்துக் கொண்டால், தொற்று மீண்டும் ஏற்பட்டு, மே மாத மத்தியில் 6000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலத்துக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால், தொற்று பரவலை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாதிப்பை குறைப்பதற்காக இரண்டு முறைகளை பின்பற்றலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. முதலாவதாக தொடர்ச்சியாக 49 நாட்கள் ஊரடங்கை செயல்படுத்துவது சிறப்பாக இருக்கும் என்றும் 5 நாட்கள் இடைவெளிவிட்டு 21 நாட்கள், 28 நாட்கள், 18 நாட்கள் என மூன்று கட்டங்களாக அமல்படுத்துவதும் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளி ஆகியவற்றுடன், பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படுவது அவசியம் என்றும் ஆய்வு வலியுறுத்துகிறது.
தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும் என்று ஆய்வை மேற்கொண்ட ரோனோஜாய் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.